வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐ.பி.எல்., எனப்படும், ‘இந்தியன் பிரீமியர் லீக்’ முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோரை திரும்ப கொண்டு வர, வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விஜய் மல்லையா தன் 70வது பிறந்த நாளை சமீபத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடினார். அதில், விஜய் மல்லையாவும், லலித் மோடியும் ஒன்றாக பங்கேற்றனர். இதுதொடர்பாக லலித் மோடி, சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டார்.
இது சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் கூறுகையில், “பொருளாதார குற்ற வழக்குகளில் தப்பியோடிய குற்றவாளிகளை நம் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதில், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதற்காக, பல நாடுகளின் அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம்,” என்றார்.
