மசோதாவுக்களுக்கு ஒப்புதல் கொடுப்பதில் முடிவு எடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா? உள்ளிட்ட 14 கேள்விகள் தொடர்பாக வரும் 22-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல மசோதக்களுகு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமலும், திருப்பி அனுப்பாமலும் வைத்திருந்தார். வேண்டுமென்றே ஆளுநர் இழுத்தடிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்தது. கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி விசாரித்த நீபதிகள், மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் நீதிபதிகள் காலக்கெடு விதித்தனர்.
இந்தத் தீர்ப்பு பரபரப்பையும், நாடு முழுவதும் அரசியல் அதிர்வையும் உண்டாக்கியது. இதனை தொடர்ந்து அரசியல்சாசனத்தின் 143(1) பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் நீதிமன்றத்திடம் சில விளக்கங்களை கேட்டார். அதன்படி ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்தது தொடர்பாக 14 கேள்விகளை திரௌபதி முர்மு கேட்டிருந்தார்.
குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்:
1. பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?
2. ஒரு மசோதா ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு இருக்கும் அனைத்து அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
3. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமை நியாயப்படுத்தத்தக்கதா?
4. பிரிவு 200-ன் கீழ் ஒரு ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு, பிரிவு 361 ஒரு முழுமையான தடையா?
5. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், சட்டப்பிரிவு 200-ன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்காக, நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு விதிக்கப்பட்டு, செயல்படுத்தும் முறையை பரிந்துரைக்க முடியுமா?
6. பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயப்படுத்தத்தக்கதா?
7. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா? செயல்படுத்தும் முறை பரிந்துரைக்கப்படுமா?
8. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கும்போது, பிரிவு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறவும் குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?
9. ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
10. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?
11. பிரிவு 145(3) இன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா?
12. பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா?
13. அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின்/ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
14. முரணான உத்தரவுகளை பிறப்பித்தல்/ஆணைகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா? என கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் கேட்ட விளக்கம் குறித்து வரும் 22-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கிறது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பிஎஸ் நரஷிம்மா மற்றும் ஏஎஸ் சந்துர்கர் அமர்வு இதனை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.