பயங்கரவாதம் தலைதூக்கும் போதெல்லாம் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் கரகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.48,520 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பொதுக்கூட்ட மேடைக்கு வரும் பாதையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பீகார் மாநில வளர்ச்சிக்காக சுமார் ரூ.50,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பீகார் வந்த போது, பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு மீண்டும் பீகாருக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க முயற்சிக்கும் போதெல்லாம், ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் வலிமையை எதிரிகள் உணர்ந்திருப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படவில்லை என்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.