இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அன்னியச் செலாவணியைச் சேமிக்கவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, வரும் டிசம்பர் மாதத்திற்குள் 85 சதவீத எத்தனால் மற்றும் 15 சதவீத பெட்ரோல் கலந்த ‘E85’ ரக எரிபொருளை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு பெருமளவு குறைவதுடன், எத்தனால் தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமும், வருமானமும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ‘E85’ எரிபொருள் பயன்பாடு என்பது பொதுமக்களுக்குக் கட்டாயமானதல்ல; வாகன உரிமையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எரிபொருளைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வாகனங்களைத் தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே ஆயத்தமாகி வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக E22 முதல் E26 வரையிலான தர நிலைகளை வெளியிடுவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்ப ரீதியிலான இந்த மாற்றம் இந்தியாவின் எரிசக்தித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version