தொடர் விபத்துகள் எதிரொலியாக பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது,
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை இப்போதே சதம் அடித்து வருகிறது. போகப்போக, வெயில் இன்னும் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கோடை வெயில் அதிகரித்துள்ளதால் விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு மூலப் பொருட்கள் கலவை செய்யும் பணியை காலை 6-10 மணிக்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும்ம் வெயில் காரணமாக வெடி விபத்துக்கள் ஏற்பட கூடிதல் வாய்ப்புகள் உள்ளன. பட்டாசு மூலப் பொருட்களை கையாளும் தொழிலாளர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
பட்டாசு செய்யும் இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்த கூடாது. பட்டாசுகளை மொத்தமாக வாங்கும் நபர்களின் விவரங்கள், அடையாள அட்டைகளை பெற்று சேகரித்து வைக்க வேண்டும். இதனை மீறினால் பட்டாசு தயாரிப்பு கூடத்திற்கான உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். மேலும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.
