காசாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் தீர்மானம், ஐநா சபையில் நிறைவேறியது. இதில் 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உட்பட 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் வாக்களிக்கவில்லை.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக காசா பகுதியில் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் உணவின்றி வாடி வருகின்றனர். அவர்களுக்கு உதவ உலகநாடுகள் முன்வந்துள்ளன. இதையொட்டி ஐநா சபையில் போர்நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் நிறைவேறியது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு..
பொதுமக்கள் பட்டினி கிடக்க வைப்பது மற்றும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவது கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல், உடனடியாக முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், அனைத்து எல்லை தடுப்புகளை திறக்கவும், பாலஸ்தீன பொதுமக்கள் அனைவருக்கும் உதவி உடனடியாகவும், பெரிய அளவிலும் சென்றடைவதை உறுதி செய்யவும் கோரப்பட்டுள்ளது. காசா பாலஸ்தீன அரசின் ஒரு பகுதியாக, இரு-அரசு தீர்வுக்கு தீர்மானம் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
பாலஸ்தீன மக்களை பலவந்தமாக இடம்பெயரச் செய்யும் மற்றும் பாலஸ்தீன நிலத்தை சட்டவிரோதமாக கைப்பற்றும் நடவடிக்கைகளை தீர்மானம் நிராகரிக்கிறது. கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றக் கட்டுமானம், நில அபகரிப்பு போன்றவற்றை உடனடியாக நிறுத்தவும் கோரப்பட்டுள்ளது. ஐ.நா. அதிகாரிகள், மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சலுகைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாதுகாப்பு கவுன்சிலில் போர்நிறுத்தம் குறித்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்த நிலையில், அரபு குழு மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு குழுவின் கோரிக்கையின் பேரில் மீண்டும் அமர்வு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் போனது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
