இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள பிரேசில் அதிபர் லூலா டி சில்வா, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
https://x.com/ANI/status/2025124870364037244?
அதிபர் லூலா மற்றும் அவரது உயர்மட்டக் குழுவினரை வரவேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “அதிபர் லூலாவையும் அவரது குழுவினரையும் இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா – பிரேசில் இடையிலான உறவுகள் நீண்ட காலமாக அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையால் பெரும் பலன்களைப் பெற்றுள்ளன” என்று புகழாரம் சூட்டினார்.
“கடந்த சில ஆண்டுகளில் தாங்கள் இருவரும் பலமுறை சந்தித்துள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு முறையும் இந்தியா மீது அதிபர் லூலா வைத்திருக்கும் ஆழமான நட்பையும் நம்பிக்கையையும் தெளிவாக உணர முடிவதாகத் தெரிவித்தார். மேலும், அதிபர் லூலாவின் இந்த வருகை வரலாற்றுச் சிறப்புமிக்க ‘AI Impact Summit’ (செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு) நிகழ்விற்குப் புத்துயிர் அளிப்பதோடு, இரு நாடுகளுக்கு இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.”
பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக பிரேசில் விளங்குவதை உறுதிப்படுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு குறித்து அவர் பேசியதாவது, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் டாலருக்கும் (சுமார் ₹1.6 லட்சம் கோடி) அதிகமாகக் கொண்டு செல்ல இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.”
“எங்களுடைய வர்த்தகம் என்பது வெறும் புள்ளிவிவரம் அல்ல; அது இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பரஸ்பர நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.”அதிபர் லூலாவுடன் வந்துள்ள மிகப் பெரிய வர்த்தகக் குழுவே, இந்தியாவின் மீது அவர்கள் வைத்துள்ள இந்த ஆழமான நம்பிக்கைக்குச் சான்றாகும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்தியா – பிரேசில் இடையிலான ஒத்துழைப்பு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ‘குளோபல் சவுத்’ (தெற்குலக வளரும் நாடுகள்) நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது.
செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்-அப் (Startup Ecosystem) துறைகளில் நாம் மேற்கொள்ளும் கூட்டாண்மை, மற்ற வளரும் நாடுகளுக்கு ஒரு புதிய திசையையும், உத்வேகத்தையும் வழங்கும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
