டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் தலைநகரான தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதிகளில் குண்டுவெடிப்பு நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பு இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்புக்குத் தகுந்த பதிலடி கொடுக்கவே, இந்தியாவில் இத்தாக்குதலை நடத்த லக்ஷர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செங்கோட்டைக்கு எதிரே உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாந்தினி சௌக் பகுதிகளைப் பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளனர். குறிப்பாக, ஐஇடி (IED) வெடிகுண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் மாதம் 10ம் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டெல்லி முழுவதும் “ஹை அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. அந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தற்போது செங்கோட்டை, மெட்ரோ நிலையங்கள் மற்றும் முக்கிய சந்தைப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

