புதுச்சேரியில் ஆளும் பாஜக – காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ. (AI) உச்சிமாநாட்டின் போது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அரை நிர்வாணமாகப் போராட்டம் நடத்தி நாட்டின் நற்பெயரைக் குலைத்துவிட்டதாகக் கூறி, நேற்று புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகம் முன்பாக பாஜக இளைஞர் அணியினர், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இன்று சனிக்கிழமை புதுச்சேரி மாநில பாஜக அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்தனர். பிரதமர் மோடியின் உருவப் பொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். அப்போது, அங்கு ஏற்கனவே திரண்டிருந்த பாஜக தொண்டர்களுக்கும் காங்கிரஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்கள் மற்றும் காலணிகளை வீசித் தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தச் சம்பவம் புதுச்சேரி அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version