இந்தியா – பாகிஸ்தான் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள போதிலும் ராஜீய விவகாரங்களில் பல்வேறு கேள்விகளை இது உண்டாக்கி உள்ளது.
போருக்கான மூலகாரணம்…
கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் இடையே ஜம்மு காஷ்மீரை மையமாக வைத்து ஏராளமான ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளன. அவை சிறிய சண்டைகளாகவும், உயிர் பலிகளும் கூட ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாமே தீவிரவாத குழுக்களால், ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்டவை. எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இது வழக்கமான ஒன்றுதான் என்ற நிலைக்கு இரு நாடுகளுமே கூட வந்து விட்டன.
ஆனால் பெஹல்காம் தாக்குதல் அப்படியல்ல. வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். அதாவது இந்தியா, ஆத்திரப்பட வேண்டும், எல்லை தாண்டி நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போன்று காணப்பட்டது. இதற்கு தோதாகவே சிறிய தீவிரவாத குழு ஒன்றை சில ஆண்டுகளாக வளர்த்து அதனை வைத்து இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
பெஹல்காம் தாக்குதல் மேற்கொண்டால் இந்தியா பதில் தாக்குதல் நடத்தும் என்ற அறியாமலா, அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் வேட்டையாடி இருக்கும். அப்படியெனில் இந்தியாவின் தாக்குதலை அது எதிர்கொள்ள தயாராகவே இருந்திருக்கும். எப்படி அதனால் இது சாத்தியமாகி இருக்க முடியும்? பொருளாதாரம் சீர்குலைந்து பாகிஸ்தானே தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவை சீண்டி சண்டை இழுப்பது எதனால்? அப்படியானால் இது பாகிஸ்தானின் நேரடி வேலைதானா? அல்லது வேறு நாடுகள் ஏதேனும் சொல்லி பாகிஸ்தான் செய்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
4 நாட்கள் போர்
ஏப்ரல் 22-ந் தேதி பெஹல்காமில் தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். பதில் நடவடிக்கையாக 15 நாட்கள் கழித்து அதாவது மே 7-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு இந்தியா, பதில் தாக்குதல் மேற்கொண்டது. இடைப்பட்ட நாட்களில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருசில தடைகளை கொண்டு வந்தது. இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது. உலக நாடுகளின் தூதர்களை அழைத்து தாக்குதல் குறித்த சூசகமான தகவல்களை பரிமாறிக் கொண்டது. இப்படி ராஜீய விவகாரங்களை முடித்துக் கொண்டு தாக்குதலை தொடங்கியது.
இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது பாகிஸ்தான். அதனால் தான் மசூத் ஆசாத் போன்ற மிக முக்கியமான தீவிரவாத தலைவர்களை காப்பாற்றி வைத்துக் கொண்டது. இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் போரில் தீவிரவாத நிலைகள் தாக்கப்பட்டன, தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களின் மூளையாக செயல்பட்ட மசூத் ஆசாத் போன்றவர்கள் கொல்லப்படவில்லை.
ஆயுத அரசியல்
இந்த நான்கு நாள் போரில் இந்தியாவின் ரபேல் விமானங்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் அறிவித்தது. ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. பாகிஸ்தானின் கூற்றை இந்தியா மறுத்துவிட்டது. ஆனால் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ரபேல் விமானம் ஒன்றை காணவில்லை என பிரான்சில் உள்ள அதன் தலைமை நிறுவனம் கூறுகிறது. ஏனென்றால் அதன பாதுகாப்பு அம்சங்களை பிரான்ஸ் நிறுவனம் தான் தற்போது வரை கையாள்கிறது. இந்த விஷயத்தில் மர்மம் மட்டுமே நிலவுகிறது.
துருக்கி, சீனா இந்த இரண்டு நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வாரி வழங்கியது. இந்தியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது அவை துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. பொருளாதாரத்தில் தள்ளாடும் பாகிஸ்தானுக்கு சீனாவும், துருக்கியும் ஏன் ஆயுதங்களை சல்லிசான விலைக்கு அள்ளி அள்ளி தருகிறது. இதன் பின்னணியை யோசிக்க வேண்டி இருக்கிறது. அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தில் பங்கு போட சீனா எத்தனிக்கிறது. அதனால் தான் தங்களின் ஆயுத வலிமையை திறமையை காட்ட இந்தியாவுடனான நான்கு நாள் போரை சீனா பயன்படுத்திக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்து இருந்தார். அதற்கு ஏற்றார் போல் இந்தியாவும், பாகிஸ்தானும் போரை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து விட்டன. உண்மையிலேயே இந்தியா மீது அமெரிக்காவுக்கு அக்கறை இருக்குமானால், சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) பாகிஸ்தான் உதவி கேட்கும் போது, அதற்கு உதவலாமா? வேண்டாமா? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டது. அதனால் தான் 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இந்தியாவுடன் போர் நடத்தும் காலத்தில் பாகிஸ்தான் நிதியுதவி கேட்டால், அதனை எதற்கு பயன்படுத்தும் என்பது குழந்தைகளுக்குக் கூட தெரியும்.
மோடி என் நண்பர் என்று அடிக்கடி சொல்பவர் ட்ரம்ப். ஆனால் பரஸ்பரி வரி விதிப்பு முறையில் இந்தியாவை நெருக்கடிக்கு ஆளாக்கினார். அதேபோன்று சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியபோது அவர்களுக்கு விலங்கிட்டு அனுப்பி வைத்தார். இப்போது பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க ஆதரவு அளித்துள்ளார். உண்மையில் ட்ரம்ப் யாருக்கு நண்பர்?
ஆசியாவின் பெரிய நாடான சீனா, நமது வடகிழக்கு எல்லையில் அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அத்துமீறுகிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்குகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா, நயவஞ்சக நாடகமாடுகிறது.
மோடி உலகமறிந்த தலைவராக இருக்கிறார். மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நடைமுறையில் வெளியுறவுக் கொள்கையில் இந்தியா இன்னும் விவரமோடு இருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. மேடைகளில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சாதுர்யமாக பேசும்போது FIRE விடத் தோன்றுகிறது. ஆனால் களத்தில் நட்பு நாடுகளே காலை வாருகின்றன. இதனை கணிக்க முடியாமல் போவது எந்த விதத்தில் சிறப்பான வெளியுறவுக் கொள்கையாக இருக்க முடியும்.
சீனா, பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளுடன் சுமூகமான உறவு இல்லை, வங்கதேசத்தை பாதி நம்பலாம். அமெரிக்கா பச்சோந்தி.
பெஹல்காம் போரானாது, நமது படை வலிமையை மட்டுமல்ல, நமது வெளியுறவுக் கொள்கையைக் கூட சீர்தூக்கி பார்க்க வைத்துள்ளது..