இந்தியாவை “மிகவும் வெற்றிகரமான” வளர்ந்து வரும் பொருளாதாரம் என்றும், உலக விவகாரங்களில் அதன் செல்வாக்கு விரிவடைந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் நடைபெற உள்ள India–AI Impact மாநாடு குறித்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த முக்கியமான உலகளாவிய விவாதத்தை நடத்த இந்தியா சரியான நாடாகும் என்று குறிப்பிட்டார்.
ஐ.நா. தலைமையகத்தில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துடனான ஒரு உரையாடலில், இந்த மாநாடு நடத்த ஏற்பாடு செய்ததற்காக இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலம் முழுவதற்கும் பயன்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
AI, வல்லரசு நாடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்படக் கூடாது: செயற்கை நுண்ணறிவு (AI) மிக முன்னேறிய நாடுகளின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கும் கருவியாக மாறக் கூடாது என்பதாகும். உலகின் இரண்டு பெரிய வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் உருவாகக் கூடாது என்று அவர் எச்சரித்தார். நேரடியாக பெயர்களை குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்து அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை நோக்கி இருந்ததாக பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) வழங்கும் நன்மைகள் சில நாடுகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய அவர், அதற்கு பதிலாக, தெற்கில் உள்ள வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளும் இந்த சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தின் பலன்களை சமமாகப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
AI உலகளாவிய வளர்ச்சி, புதுமை மற்றும் முன்னேற்றத்தை ஆதரிக்கும் பொதுவான கருவியாக மாற வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் சமத்துவமான முன்னேற்றத்தை உருவாக்க AI உதவக்கூடும் என்றும், அதனால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற உள்ள இந்த உயர்மட்ட உச்சி மாநாடு, தெற்கு பகுதியில் நடத்தப்படும் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடாகும். இந்த மாநாடு “People, Planet, Progress” என்ற மூன்று முக்கிய கருப்பொருட்களை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. மனித நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த முன்னேற்றம் ஆகிய துறைகளில் AI எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்வில் பல உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அதில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கூகிள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த உயர்மட்ட AI உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அன்டோனியோ குட்டெரெஸும் இந்தியா வரவுள்ளார்.
“உண்மையான பன்முக உலகம்” (true multipolar world) உருவாக இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார். உலக அமைப்பு ஒரே ஒரு ஆதிக்க சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்றும், இரண்டு வல்லரசுகளுக்கிடையே பிரிந்த அமைப்பாகவும் மாறக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இந்தியா போன்ற எழுச்சி பெறும் பொருளாதார நாடுகள், உலக வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் அதிக சக்திவாய்ந்த பங்கை வகிக்க வேண்டும். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் வளர்ந்து வரும் கூட்டுறவுகள், குறிப்பாக சமீபத்திய ஐரோப்பிய யூனியன் உடன் வர்த்தக முன்னேற்றங்கள், இதற்கான நல்ல உதாரணங்களாகும் என்றார்.
