பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக நடத்தப்பட்ட இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக இணைந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
பயங்கரவாதிகளையும், பயங்கரவாத முகாம்களையும் அழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் குறிப்பிட்டார். 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் தாக்குதலில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ராப் மற்றும் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முதாசிர் அஹமது உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஜெனரல் ராஜீவ் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் குறித்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியநிலையில், பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய விமான தளங்கள், குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்களை குறி வைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார். பாகிஸ்தான் அலை அலையாக அனுப்பிய ட்ரோன்கள் வெற்றிகரமாக இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும், மே 7 முதல் 10 வரை கட்டுப்பாட்டுக்கோட்டில் நடந்த பீரங்கி மற்றும் சிறிய ஆயுத துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 35 முதல் 40 பேர் வரை உயிரிழந்ததாகவும் ஜெனரல் ராஜீவ் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செயற்கைக் கோள் படங்களை காண்பித்து விளக்கமளித்தார். முரித்கே, பவல்பூர் பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் குறித்து விரிவான வீடியோ வெளியிட்டு அவர் விளக்கினார். தாக்குதலுக்கு முன்பும் அதன் பின்னரும் பயங்கரவாத முகாம்களின் நிலை குறித்து வீடியோவில் விளக்கப்பட்டது. ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மூலம் பெருமளவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட ஏர் மார்ஷல் பாரதி, தயார்நிலையில் இருந்த இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இலக்குகளுக்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதாக தெரிவித்தார். பயணிகள் விமானங்களை பறக்க பாகிஸ்தான் அனுமதித்ததால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருந்ததாகவும் பாரதி கூறினார்.
தொடர்ந்து பேசிய வைஸ் அட்மிரல் என்.பிரமோத், இனியும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும் என்று எச்சரித்தார். இந்திய கடற்படையின் கேரியர் போர்க் குழு, மேற்பரப்புப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உடனடியாக முழு தயார்நிலையுடன் அரபிக் கடலில் நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தாக்குதல் நடந்த 96 மணி நேரத்திற்குள் அரபிக் கடலில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டதாகவும் பிரமோத் கூறினார். பெரும்பாலும் துறைமுகங்களுக்குள் அல்லது கடற்கரைக்கு மிக அருகில் உள்ள பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதாக தெரிவித்த அவர், இந்தியாவின் பதிலடி அளவிடப்பட்டு பொறுப்பான முறையில் இருந்ததாக குறிப்பிட்டார்.