இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள்  மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் ஜிந்தில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனையின் பின்னணியில், ரயிலுக்கு ஹைட்ரஜன் எரிபொருளை பாதுகாப்பாக நிரப்பும் ஹைட்ரஜன் ரீஃப்யூலிங் ஸ்டேஷன் (Hydrogen Refuelling Station – HRS) முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்த ஹைட்ரஜன் நிரப்பும் நிலையத்தை ஃப்ளூட்ரான் (Fluitron) நிறுவனம் வடிவமைத்து, தயாரித்து வழங்கியுள்ளது. ஜிந்த் நிலையத்தில் எலக்ட்ரோலைசர் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன், ஃப்ளூட்ரான் உருவாக்கிய HRS அமைப்பு மூலம் உயர் அழுத்தத்தில் பாதுகாப்பாக ரயிலின் எரிபொருள் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.

இந்த அமைப்பில்,  மணிக்கு 18 கிலோ ஹைட்ரஜன் நிரப்பும் திறன் கொண்ட, 500 பார் அழுத்த கம்ப்ரசர் அமைப்பு, 350 பார் அழுத்தத்தில் செயல்படும் 2 ஹைட்ரஜன் டிஸ்பென்சர்கள், ஹைட்ரஜன் சுருக்கம், சேமிப்பு மற்றும் விநியோகத்தை முழுமையாக தானியங்கி முறையில் ஒருங்கிணைக்கும் மேலாண்மை அமைப்பு,  ஒவ்வொரு நிரப்பும் செயல்பாட்டிலும் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணிக்கும் தொழில்நுட்பம் உள்ளனர்.

ஃப்ளூட்ரான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாம் ஜோசப் இதுதொடர்பாக கூறுகையில், “இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் நாட்டின் பசுமை ஆற்றல் பயணத்தில் முக்கிய மைல்கல். மக்கள் ரயிலைப் பார்க்கலாம்; ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் ஹைட்ரஜன் நிரப்பும் உள்கட்டமைப்புதான் இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளது. கொச்சியில் வடிவமைக்கப்பட்டு, கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்ட எங்கள் தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உலகத் தரமான ஹைட்ரஜன் உள்கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது,” என்றார்.

ஃப்ளூட்ரான் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை இயக்குநர் மோட்டி தாமஸ் கூறுகையில், “மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் பல ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், தார்ஜிலிங், கல்காஷிம்லா மற்றும் நீலகிரி மலை ரயில் பாதைகள் போன்ற பாரம்பரிய வழித்தடங்களிலும் இதேபோன்ற அமைப்புகளை உருவாக்க இந்திய ரயில்வேயுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version