இண்டிகோ நெருக்கடிக்கு மத்தியில், தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸின் ரோபோ போன்ற மன்னிப்பு வீடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்ததால், பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், ‘டிசம்பர் 5 மிகக் கடுமையான நாள்’ என்று குறிப்பிட்டு இன்று மாலை பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பீட்டர் எல்பெர்ஸ்.
தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேலான விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பீட்டர் எல்பெர்ஸ் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையும் இந்தச் சிக்கல் தொடரும் என்றாலும், 1000க்கும் குறைவான எண்ணிக்கையிலே விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், விமானச் சேவைகள் தாமதமாவது மற்றும் ரத்து செய்யப்படுவதால் ஏற்பட்டுள்ள பெரும் சிரமத்துக்காக வீடியோ மூலம் மன்னிப்புக் கோரிய பீட்டர் எல்பெர்ஸ், கடந்த சில நாட்களாக நாங்கள் கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டோம், டிசம்பர் 5 ஆம் தேதி மிக மோசமானது, இதன் விளைவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, இது எங்கள் தினசரியில் பாதிக்கும் மேல். இண்டிகோ சார்பாக, ஏற்பட்ட சிரமத்திற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழல் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், நாங்கள் எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது.” எனப் பேசியுள்ளார்.
அத்துடன் நிலைமையை சமாளிக்க மூன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். “முதலாவதாக, வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது. இதற்காக சமூக ஊடகங்களில் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இது பற்றிய விரிவான தகவல், பணம் திரும்ப வழங்குதல், விமான ரத்து விவரங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர் ஆதரவு நடவடிக்கைகள் பற்றிய தகவல் இப்போது அனுப்பப்பட்டுள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும், பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸின் ரோபோ போன்ற மன்னிப்பு வீடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. வீடியோவில் அவரது தொனி மிகவும் ரோபோவாகவும் தோன்றியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். லிங்க்ட்இன் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான கருத்துகள் குவிந்தன, ஒரு AI பாட் படித்தது போல் இருந்தது, நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் தலைவரின் பதில் அல்ல என்று பயனர்கள் குற்றம்சாட்டினர்.
