உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்றார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) மாலையுடன் ஓய்வு பெற்றார். முன்னதாக கடந்த உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் கடந்த அக்டோபர் 30ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அடுத்த 15 மாதங்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியில் நீடிப்பார். 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி அவர் ஓய்வு பெற உள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் நீதிபதி சூர்ய காந்த் இடம்பெற்றுள்ளார். மேலும், பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், ஊழல், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை சூர்ய காந்த் வழங்கி உள்ளார். குறிப்பாக சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும் மசோக்கள் குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த வழக்கை விசாரிக்கும் அரசமைப்பு அமர்வு நீதிபதி சூர்ய காந்த் இடம்பெற்றிருந்தார்.
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் 1962ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிறந்த சூர்ய காந்த், சட்டம் படித்து வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர், பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி உள்ளார். கடந்த 2018ல் இமாச்சலபிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், 2019 மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக அவர் பதவியேற்றார்.
