காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி தந்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டுமென கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து, கர்நாடகதமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மஞ்சுநாத் தேவா, மேகதாது அணைத் திட்டம் விவசாயத்திற்கான திட்டம் அல்ல. ஆசியாவிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பெங்களூரு நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் சுமார் 1.5 கோடி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான திட்டம் என்றார். அந்தப் பகுதியில் ஏராளமான தமிழ் மக்களும் வசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் தமிழகத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்ட போது, அன்றைய கர்நாடக முதல்வர் ஜே.எச்.படேல் ஒத்துழைப்பு வழங்கி அனுமதித்ததன் மூலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக கூறிய அவர், அதேபோல, பெங்களூரு மக்களின் குடிநீர் பிரச்சனை தீர மேகதாது அணை கட்டத் தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  தமிழக அரசு தனது பிடிவாதப் போக்கை உடனே கைவிட வேண்டும் என்றும் மஞ்சுநாத் தேவா வலியுறுத்தினார்.

கன்னட அமைப்புகளின் சாலை மறியல் போராட்டம் காரணமாக, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லையான அத்திப்பள்ளி மற்றும் ஜூஜூவாடியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version