நாட்டின் அணு சக்தி விஞ்ஞானிகளில் முன்னோடியான எம்.ஆர் ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக தமது 95-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாட்டின் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அணு மின் நிலையங்களை உருவாக்கியதில் சிறப்பான பணிகளை மேற்கொண்டவர் எம்.ஆர் ஸ்ரீனிவாசன் ஆவார்.
இந்தியாவும் அணுசக்தியும்
நம் நாட்டில் நிலக்கரி, எரிவாயு, காற்றாலை, நீர் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மின்சார உற்பத்தியில் அணுசக்தி பெரும் ஆதாரமாக உள்ளது. இந்தியாவில் சுமார் 6,780 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட 22 அணு உலைகள், 8 அணு மின் நிலையங்களில் உள்ளன. அணு சக்தி விஞ்ஞானத்தில் முன்னோடியான ஹோமி ஜே பாபாவின் தலைமையில் தொடங்கப்பட்ட அணு சக்தி ஆணையம், இதன் அதிகாரப்பூர்வ பொறுப்பாக செயல்படுகிறது. ஹிரோஷிமா அணு குண்டு வெடிப்புக்குப் பிறகு உலகின் மொத்தப் பார்வையும் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இருக்கிறது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் தற்போது 3% பங்கைக் கொடுத்து வரும் அணு மின் உற்பத்தி, வருங்காலத்தில் 19% – 21% உற்பத்தியை விரைவில் எட்டும் என்று நம்பப்படுகிறது. நம் நாட்டில் இப்போதுள்ள 22 அணு உலைகளில், 18 அணு உலைகள் உருவாக்கப்பட காரணமாக இருந்தவர் டாக்டர் எம்.ஆர் ஸ்ரீனிவாசன்.
பணியும் பின்னணியும்
மாலூர் ராமசுவாமி ஸ்ரீனிவாசன் என்ற முழுப் பெயரைக் கொண்ட எம்.ஆர் ஸ்ரீனிவாசன், 1930-ம் ஆண்டு பிறந்தார். இயற்பியல் மற்றும் இயந்திரப் பொறியியலில் ஆர்வம் காரணமாக இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை 1952-ல் முடித்தார். 1955-ம் ஆண்டு இந்திய அணுசக்தித் துறையில் இணைந்தார். அப்போதைய தலைவரும் அணுசக்தி துறையில் முன்னோடியுமான ஹோமி ஜே பாபாவுடன் இணைந்து பல கண்டுபிடிப்புகளில் சிறப்பான பங்காற்றினார். ஆசியாவின் முதல் அணு உலை மும்பையில் உள்ள அப்சரா ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டபோது அப்பணியில் முக்கிய பணியை எம்.ஆர் ஸ்ரீனிவாசன் மேற்கொண்டார்.
முதல் அணுமின் நிலையம்
நம் நாட்டின் முதல் அணுமின் நிலையம் 1959-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள தாராபூரில் உருவாக்கப்பட்டது. அதற்கு முதன்மை திட்டப் பொறியாளராக எம்.ஆர் ஸ்ரீனிவாசனை நியமித்தார் அப்போதைய தலைவர் ஹோமி பாபா. தாராபூர் அணுமின் நிலையம், எம்.ஆர் ஸ்ரீனிவாசனின் மேற்பார்வையில், ஹோமி பாபாவின் அறிவுறுத்தலோடு முதல் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டது. அதன் சிறப்பான செயல்பாட்டோடு பணியைத் தொடர்ந்த ஸ்ரீனிவாசன், 1967-ல் மெட்ராஸ் அணுமின் நிலையத்தின் தலைமை திட்டப் பொறியாளாகப் பொறுப்பேற்றார்.
அணுசக்தித் துறையில் தொடர் முன்னேற்றம்
1974-ம் ஆண்டு அணுசக்தி திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநராகப் பொறுப்பேற்ற எம்.ஆர் ஸ்ரீனிவாசன், 1984- ல் அணுசக்தி வாரியத்தின் தலைவர் ஆனார். பின்னர் 1987-ம் ஆண்டில் அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில், இந்திய அணுசக்தி கழகத்தின் நிறுவன தலைவராகவும் ஆனார் எம்.ஆர் ஸ்ரீனிவாசன். அவரது தலைமையின் கீழ்தான் 18 அணுசக்தி உலைகள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அவற்றில் 7 செயல்பாட்டில் உள்ளன, 7 கட்டமைக்கப்பட்டு வருகின்றன மேலும் 4 திட்டமிடல் நிலையில் உள்ளன. எம்.ஆர் ஸ்ரீனிவாசனின் பங்களிப்புகளை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல்
இந்நிலையில், உதகையில் தங்கியிருந்த எம்.ஆர் ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, நாட்டின் வலுவான அணு சக்தி கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ள எம்.ஆர் ஸ்ரீனிவாசனின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது முயற்சிகள் இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றும் முயற்சியின் முக்கிய மைல்கல் ஆகும். அணுசக்தித் துறையின் துடிப்பு மிக்க தலைவராக அவர் என்றென்றும் நினைவு கொள்ளப்படுவார். நவீன விஞ்ஞானத்திற்கு அவர் அளித்துள்ள பங்கிற்காக இந்தியா எப்போது அவருக்கு நன்றி செலுத்தும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் செய்திகளைப் பதிவிட்டுள்ளனர்.