”மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு தடையாக இருப்பதாக” பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ரூ.5,000கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, முடிந்த திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “எக்கு நகரமான துர்காப்பூர், இந்தியாவின் மனித வளத்துக்கும் மையமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு துர்காப்பூர் முக்கிய பங்காற்றியது. இந்த வளர்ச்சி திட்டங்கள் இந்த நகரின் அடையாளத்தை பலப்படுத்துவதுடன் இணைப்பையும் அதிகரிக்கும்.
மேற்கு வங்கத்தின் ரயில் இணைப்பை மேம்படுத்த ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன. வந்தே பாரத் ரயில்கள் அதிகம் ஓடும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. கோல்கட்டா மெட்ரோ விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு உள்ளன. இன்று இரண்டு ரயில்வே பாலங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. துர்காப்பூர் மற்றும் ரகுநாதபூரில் உள்ள தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதற்காக ரூ.1,500 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் பணியாற்றி வருகிறோம்.
பா.ஜ.,வுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சவால் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானம் உலகளவில் பேசப்படும் விஷயமாக உள்ளது. நாட்டில் ஏற்படும் மாற்றங்களுக்கு இதுவே பெரிய அடிப்படையாக உள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, இந்த மாற்றங்களுக்கு பெரிய அம்சம் ஆகும்.
தொழில் வளர்ச்சியடைந்த மாநிலமாக மேற்கு வங்கத்தை மாற்றுவோம். மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றும் திறன் பா.ஜ.,வுக்கு உண்டு. தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக மாற்றுவோம். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் தடையாக உள்ளது.
திரிணமுல் வீழ்ச்சி அடையும் போதுதான் மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்லும். மக்களுக்கு எதிரானதாக திரிணமுல் காங்கிரஸ் அரசு உள்ளது. மத்திய பா.ஜ., அரசு மாநிலங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது. உண்மையாக மற்றும் கடினமாக உழைக்கும் அரசை உருவாக்க உறுதி ஏற்போம். மாநிலத்துக்கு புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது. வன்முறை நடக்கும் மாநிலத்தில் முதலீடு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். திரிணமுல் காங்கிரசை அகற்றி மாநிலத்தை காப்பாற்றுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.