நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது டெல்லி காவல்துறை புதிய எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டபோது அதை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 கோடி கடன் இருந்தது.

2010-ம் ஆண்டு சோனியா, ராகுல் காந்தி பங்குதாரர்களாக கொண்ட யங் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் கடனை அடைத்து அதன் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க முயன்றனர் என்பதுதான் புகார்.

இந்த நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கு டெல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை அளித்த புகாரின் பேரில் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எஃப்.ஐ.ஆரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் மேலும் ஆறு பேரின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றப்பத்திரிகை தாக்கலானதை கருத்தில் கொண்டு, வழக்கு தொடர்பான உத்தரவை வரும் டிசம்பர் 16-ம் தேதி பிறப்பிக்கப் போவதாக நீதிபதி விஷால் கோக்னே அறிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version