8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்ற விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “இந்திய நீதித்துறையின் மீது அரசுக்கு முழுமையான மரியாதை உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு முறையாகப் பின்பற்றும். நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துகள் மற்றும் தகவல்கள் குறித்து உரிய ஆய்வு செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய அந்தப் பாடத்தைத் தயாரித்தவர்கள் மற்றும் அதைச் சரிபார்த்தவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இது ஒரு மிகப்பெரிய தவறு என்றும், இதற்குக் காரணமானவர்களின் பொறுப்பு நிலை உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அந்தப் புத்தகத்தின் அச்சிடப்பட்ட பிரதிகளைப் பறிமுதல் செய்யவும், அதன் டிஜிட்டல் வடிவத்தை இணையதளங்களில் இருந்து நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதித்துறையின் பிம்பத்தைச் சீர்குலைக்கும் வகையில் இத்தகைய கருத்துகள் இடம்பெற்றிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

