ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை செயலி மூலம் மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
அரசின் திட்டங்கள், வங்கிகள் தொடர்பான சேவைகள் முதல் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் எண் அவசியமாகி உள்ளது. பான் கார்டு முதல் பல்வேறு திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆவணமாக மாறி உள்ள ஆதாரில் பெயர், முகவரி, செல்போன் எண் என முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென்றால், ஆதார் மையங்கள், வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அவ்வாறு செல்லும் காலங்களில், அலுவலகங்களில் ஆதார் திருத்தம் மேற்கொள்ள வேண்டி வந்தவர்களின் கூட்டம் காரணமாக பல மணி நேரம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், புதிய அறிவிப்பு ஒன்றை ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை, செல்போன் செயலி மூலமாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆதாரில் உள்ள செல்போன் எண்ணை, வீட்டில் இருந்தபடியே OTP மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று ஆதார் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் தொடர்பான சேவைகளில் மக்களின் தேவைகளில் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
