பணியாளர்கள், பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து பணிக்கொடை (Gratuity) பெறுவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதி திருத்தப்பட்டு ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் புதிதாக 4 தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு நேற்று முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை தொகுத்து, புதிதாக 4 புதிய தொழிலாளர் சட்டங்களை (Labour Codes) அதிகாரபூர்வமாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தொழிலாளர் சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய சட்ட கட்டமைப்பு, விதிகளை சுலபமாக்குதல், தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துதல், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துதல், தொழிலாளர் நடைமுறைகளை உலகளாவிய சிறந்த முறைகளுக்கு இணையாகக் கொண்டு வருதல் ஆகியவற்றை முதன்மை இலக்காக வைத்துக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஊதிய சட்டம்-2019, தொழில்துறை உறவுச் சட்டம்-2020, சமூகப் பாதுகாப்புக்கான சட்டம்-2020, சுகாதாரம், பாதுகாப்பு, பணி நிலைமைச் சட்டம்-2020 ஆகிய 4 புதிய சட்டங்கள் தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்ட மசோதாக்கள் நான்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படாமல் இருந்தன.
