ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா அங்கீகரிக்கும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்தநிலையில், அதிபர் டிரம்பின் சிறப்பு குழுவும், ரஷ்ய அதிகாரிகள் தரப்பும் 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். ரஷ்யா, உக்ரைன் இடையே சமாதானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி தங்களிடம் இருப்பதாக தாங்கள் நினைப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்றும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து ஒருபோதும் உக்ரைனுக்கு வழங்கப்படாது, ரஷ்யா இதுவரை ஆக்கிரமித்துள்ள நிலங்களை உக்ரைன் விட்டுத்தர வேண்டும், உக்ரைன் ராணுவத்தின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ள ஒப்பந்தம் தங்கள் நாட்டை சரணடைய வைப்பதற்கான சூழ்ச்சி என்றே உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.

நமது வரலாற்றின் மிகவும் கடினமான தருணங்களில் ஒன்றை எதிர்கொள்ளக்கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனின் முக்கிய நலன்களைப் பாதுகாப்பேன் என்றும் அதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சமாதான ஒப்பந்தத்தை ரஷ்ய அதிபர் புடின் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளநிலையில், நவம்பர் 27ம் தேதிக்குள் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று உக்ரைனை டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version