உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான குழுவை அமைக்க வேண்டும் என்று ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு இன்று (நவ. 22) தொடங்கி உள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா தலைமையில் உச்சி மாநாடு தொடங்கி உள்ளது. இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் உள்பட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உள்ளது.
ஜி20 உறுப்பு நாடுகள் உள்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். முதல் முறையாக ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர், அதனை உற்சாக கண்டு ரசித்தார்.
இதனிடையே ஜி20 உச்சி மாநாட்டு நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடியை தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகத் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மாநாட்டின் முதல் அமர்வில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் உலகின் வளரும் நாடுகளின் பிரச்னை குறித்து மோடி உரையாற்றினார். சுகாதார அவசரநிலைகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை சந்திக்கும் போது, செயல்படுவதன் முலம் நாம் வலுவாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அவசரநிலை காலங்களில் விரைவான உதவிகளை பெறும் வகையில், சக ஜி20 நாடுகளில் இருந்து பயிற்சி பெற்ற பேரிடர் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழுக்களை உருவாக்குவதே நமது முயற்சியாக இருக்க வேண்டும் என்றார். உலகளாவிய போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குழுவை அமைத்து, அதற்கான சட்ட விரோத பணபரிமாற்றத்தை தடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
