அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (சிபிபி) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கலிபோர்னியாவின் எல் சென்ட்ரோ செக்டாரில் உள்ள எல்லை ரோந்துப் படையினர், குடியேற்ற சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது சட்டவிரோதமாகக் குடியேறியதுடன் வணிக ரீதியான ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொண்டு லாரி ஓட்டி வந்த 49 பேரை கைது செய்துள்ளனர். இதில் 30 பேர் இந்தியர்கள் ஆவர். மற்றவர்கள் எல் சல்வடார், சீனா, எரித்ரியா, ஹைதி, ஹோண்டுராஸ், மெக்சிகோ, ரஷ்யா, சோமாலியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
31 பேர் வைத்திருந்த உரிமங்கள் கலிபோர்னியாவில் வழங்கப்பட்டுள்ளன. மற்ற உரிமங்கள் புளோரிடா, இல்லினாய்ஸ், இண்டியானா, ஓஹியோ, மேரிலேண்ட், மின்னசோட்டா, நியூஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் வாஷிங்டனில் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
