பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அலுவலகமான ‘சேவா தீர்த்தில்’ (Seva Tirth) இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 13-ஆம் தேதி தெற்கு பிளாக்கில் இருந்த பழைய அலுவலகத்தில் கடைசி கூட்டம் நடைபெற்ற நிலையில், புதிய அலுவலகத்திற்கு மாறிய பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். பழைய அலுவலகத்தில் நடந்த இறுதிச் சந்திப்பின் போது, சுதந்திரத்திற்குப் பின் எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மற்றும் போர் உத்திகள் வகுக்கப்பட்ட அந்த கட்டிடத்தின் நினைவுகளை பிரதமர் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த அமைச்சரவைக் கூட்டங்களில் ஒரு சிறப்பம்சமாக, வழக்கமான நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால், அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த அல்லது தனிப்பட்ட வாழ்வின் ‘நல்ல செய்திகளை பகிருமாறு பிரதமர் ஊக்குவிக்கிறார். ஒரு நஷ்டத்தில் இயங்கிய அரசு நிறுவனத்தை லாபத்திற்கு மாற்றியது போன்ற நிர்வாக வெற்றிகளையோ அல்லது அமைச்சர்களின் குடும்பத்தில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையோ இதில் பகிர்ந்து கொள்ளலாம். அமைச்சர்களிடையே ஊக்கத்தையும், நேர்மறையான எண்ணங்களையும் வளர்ப்பதற்காக இந்த முன்னெடுப்பை பிரதமர் மேற்கொண்டு வருகிறார்.
நிர்வாக வசதிக்காக குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இருந்த அமைச்சரவைச் செயலகமும் தற்போது சேவா தீர்த்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம், பிரதமரின் புதிய அலுவலகம் மற்றும் இல்லம் ஆகியவை அருகருகே அமையும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வி.வி.ஐ.பி (VVIP) வாகனப் போக்குவரத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் குறையும் என்றும், அரசு நிர்வாகப் பணிகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வேகம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல்களுக்கு மத்தியில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில், பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடுத்தகட்ட விரிவாக்கம் மற்றும் விவசாயிகளுக்கான சிறப்புச் சலுகைகள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சில புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் குறித்தும் அமைச்சரவை இன்று பச்சைக்கொடி காட்ட வாய்ப்புள்ளது. மேலும், அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவுகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளனர். வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களை நேரடியாகச் சென்றடையும் வகையிலான சில சமூக நலத்திட்ட அறிவிப்புகளும் இக்கூட்டத்தின் முடிவில் வெளியாகக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிப்பார்கள். இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சாமானிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வலுசேர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு முன்னதாக நடைபெறும் இந்தக் கூட்டம், கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
