மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, ஆகஸ்ட் மாதத்தில் இயக்கப்படும் பல முக்கிய விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12666), கொடைரோடு மற்றும் திண்டுக்கல் நிலையங்களைத் தவிர்த்து, மானாமதுரை – காரைக்குடி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

அதேபோல், நாகர்கோவிலில் இருந்து மும்பை லோக்மான்ய திலக் முனையத்திற்கு ஆகஸ்ட் 9, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (16352), திண்டுக்கல் நிலையத்தைத் தவிர்த்து மானாமதுரை – காரைக்குடி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலும் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நின்று செல்லும்.

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் (16128), மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை நிலையங்களைத் தவிர்த்து மானாமதுரை – காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடாவுக்கு ஆகஸ்ட் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (16354), மதுரை மற்றும் திண்டுக்கல் நிலையங்களைத் தவிர்த்து மானாமதுரை – காரைக்குடி வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் மானாமதுரை மற்றும் காரைக்குடி நிலையங்களில் நின்று செல்லும்.

தண்டவாள பராமரிப்பு பணிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே சரிபார்த்து, மாற்றியமைக்கப்பட்ட ரெயில் இயக்க விவரங்களை அறிந்து பயணம் மேற்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version