உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் தினமும் 10 நிமிடம் செய்தித் தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவ- மாணவிகள் தொலைக்காட்சி, செல்போன் பார்க்கும் நேரத்தை குறைத்தல், வாசிப்பு தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, உத்தர பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு அந்த மாநில அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சார்தி சென் சர்மா உத்தரவு அனுப்பியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆங்கிலம், இந்தி நாளிதழ்களில் வரும் செய்தியை படிப்பதை பள்ளிகளில் நடக்கும் தினமும் வாசிக்கும் பகுதியில் ஒன்றாக்க வேண்டும். காலையில் பள்ளி மாணவர்கள் பிரார்த்தனைக்காக திரளும்போது, செய்தித் தாள்கள் படிக்க 10 நிமிடம் ஒதுக்க வேண்டும். அப்போது மாணவர்கள் ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில், தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டுத் தொடர்பாக வரும் முக்கிய நேர்மறையான (பாசிட்டிவ்) செய்திகள், நடுபக்க கட்டுரை ஆகியவற்றை அனைவர் முன்பும் வாசிக்க வேண்டும்.
ஆங்கிலம், இந்தியில் இருக்கும் கடினமான 5 வார்த்தைகளை தேர்வு செய்து, அதை அர்த்தத்துடன் தினமும் செய்தி வாசிப்பின்போது மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். செய்தித் தாள்களில் வரும் சொடுகு உள்ளிட்டவைகளை வைத்து மாணவர்களிடையே போட்டிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து கூடுதல் தலைமை செயலாளர் சார்தி சென் சர்மாவிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டதற்கு, அரசு பள்ளிகளை மனதில் வைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகள், சுயமாக முடிவெடுக்கலாம் என்று பதிலளித்தார்.
