பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பீகார் மாநில அரசியலில் பெரும் திருப்பமாக, முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் விலகியுள்ளார். அவர் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று (மார்ச் 5) மனுத்தாக்கல் செய்யவுள்ளதால், தனது பதவியைத் துறக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகாரின் நீண்டகால முதலமைச்சராகப் பணியாற்றிய நிதிஷ் குமார், தேசிய அரசியலில் தடம் பதிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நிதீஷ் குமார் இதனை உறுதி செய்துள்ளார். பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் எனக்கு தொடர்ந்து நம்பிக்கையையும் ஆதரவையும் அளித்து வருகிறீர்கள். இதனாலே பிகார் மக்களுக்கு நாங்கள் உண்மையாக நேர்மையாக சேவை செய்து வருகிறோம். உங்களுடைய நம்பிக்கை, ஆதரவின் காரணமாகவே பிகார் இன்று வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்காக கடந்த காலங்களில் பலமுறை உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.

எனது நாடாளுமன்ற வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து பிகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று விரும்பினேன். எனவே, இப்போது மாநிலங்களவை உறுப்பினராக, வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.

உங்களுடனான இந்த உறவு எதிர்காலத்தில் தொடரும் என்றும் பிகாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவேன் என்றும் நான் மனதார உறுதியளிக்கிறேன். புதிதாக அமையவுள்ள அரசுக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இவரது விலகலைத் தொடர்ந்து, பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் அம்மாநிலத்தில் சூடுபிடித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தற்போது பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளதால், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே அடுத்த முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கான உத்தேசப் பட்டியலில் விஜய்குமார் சின்ஹா, சாம்ராட் சௌத்ரி, அமைச்சர்கள் திலீப் ஜெய்ஸ்வால், நித்யானந்த் ராய் மற்றும் எம்.எல்.ஏ சஞ்சீவ் சௌராசியா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. பாஜக மேலிடம் இது குறித்த இறுதி முடிவை எடுக்கவுள்ள நிலையில், பாட்னாவில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான ஆலோசனைத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மற்றொரு சுவாரசியமான திருப்பமாக, நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் இன்று முறைப்படி ஐக்கிய ஜனதா தளம் (JD-U) கட்சியில் இணையவுள்ளார். மென்பொருள் பொறியாளரான அவர், புதிய அமைச்சரவையில் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரில் ஒரு ஆட்சி மாற்றமும், அதே நேரத்தில் வாரிசு அரசியலும் இணைந்து அரங்கேறப் போவது அம்மாநில மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version