ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ட்ரைலர் தான் என்றும் இனிமேல் தான் படமே இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்திற்கு சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை வீரர்களை சந்தித்து பாகிஸ்தான் உடனான தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டதற்கு பாராரட்டு தெரிவித்தார்.
பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் 14 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டினார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை இந்தியா ஓயாது என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச செலாவணி நிதியம் கொடுத்த நிதியை பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் வழங்கி உள்ளதாகவும், நிதி கொடுப்பதை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்திய ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்த அவர், நேரம் வரும் போது ஆபரேஷன் சிந்தூரின் முழு வடிவத்தை உலகம் பார்க்கும் என்று கூறினார்.