கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினர் கரூர் சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையை எதிர்த்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு கட்சி தொண்டர்களையும், மக்களையும் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் கைவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது விஜய் மற்றும் தவெக கட்சின் முன்னணி தலைவர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாகியுள்ளது. மேலும் கரூர் விவகாரத்தில் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூர் விவகாரத்தில் சிலர் திட்டமிட்டே சதியை அரங்கேற்றியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. இதனால் கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், கரூர் விவகாரத்தை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நின்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.