அந்தரங்கப் படங்கள், விடியோக்கள் இணையத்தில் பரவினால் உடனடியாக நீக்குவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள், ஆபாச இணையதளங்களில் பரவி வரும் தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை நீக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் வழக்கறிஞரின் விடியோக்களை நீக்க இணையதளங்களுக்கும், இது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவுவதை தடுக்கும் வகையிலும், புகார் அளிக்கும் வகையிலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள், தமிழகத்தில் மேலும் 9 இணையதளங்களில் பரவி வருவதாக அதன் விபரங்களை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு டி.ஜி.பி. தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, மனுதாரர் தரப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட இணையதளங்களின் ‘லிங்க்’கள் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பெண்களின் தனிப்பட்ட அந்தரங்கப் படங்கள் பரவுவது அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை மிக விரைவாக நீக்குவதற்காக மத்திய அரசு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக கூறி, அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் படி புகார் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராம்,பேஸ்புக், கூகுல் இணைய சேவை நிறுவனங்கள் கட்டாயமாக நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், மத்திய அரசின் கீழ் இயங்கும் பிரத்யேக இணையதளம் (www.cybercrime.gov.in) உதவி எண் 1930 மூலமும்
புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒன் ஸ்டாப் செண்டர்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்கவும், சட்ட உதவிகளை பெறவும், உளவியல் ஆலோசனை பெறுவதற்குமான ஒரே இடமாக ஒன் ஸ்டாப் மையங்கள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version