இந்தியப் படைகளின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியப் படையினர் வெளிப்படுத்திய வீரமும், துல்லிய தாக்குதலும் இந்தியர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளதாக அவர் கூறினார்.
மக்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 122-வது பதிப்பு இன்று ஒலிபரப்பானது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய முக்கிய அம்சங்கள்:
பயங்கரவாதத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றுபட்டு உறுதியோடு உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு.
ஆபரேஷன் சிந்தூரின் துல்லியம், தீவிர தாக்குதல் ஆகியவை எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை அழித்து ஒழித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இது மாறிவரும் இந்தியாவின் காட்சியாக அனைவரது மனதிலும் தேசபக்தி உணர்வை ஊட்டியுள்ளது.
நாட்டின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி ராணுவத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை பல குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையின் அங்கமாக கருதி, பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகள், ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இது, உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற இயக்கத்திற்கு புதிய சக்தியை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரும் தங்கள் வாழ்க்கையில் முடிந்தவரை உள்நாட்டுப் பொருட்களுக்கு முதன்மை அளிப்போம் என்று உறுதியேற்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும்.
மாவோயிஸ்ட் தீவிரவாதம் காரணமாக வளர்ச்சி குன்றியிருந்த பகுதிகளில் இப்போது அற்புதம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கச்சிரோலி மாவட்டத்தில் உள்ள காடேசரி கிராமத்திற்கு முதன்முதலாக பேருந்து சென்றபோது மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர். இது தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கையால் நிகழ்ந்தது.
தீவிரவாதிகளின் ஆதிக்கம் காரணமாக, சாலை வசதி இருந்தும் பேருந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளது.
மாவோயிஸ்ட் தீவிரவாதம் பாதித்த சத்தீஸ்கர் மாநிலத்தில் இப்போது பொதுத் தேர்வு முடிவுகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது.
மாவோ சித்தாந்தம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த தண்டேவாடா மாவட்டத்தில் தற்போது கல்வி கொடிகட்டிப் பறப்பது பெருமிதம் அளிக்கிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.