ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் தாக்குதலில் இருந்து மீண்டு வருவதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்களாகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில், பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்தன.
இந்தநிலையில், ஜம்மு, காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த இடங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமித்ஷா, பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி தந்ததாக தெரிவித்தார். பயங்கரவாதிகளின் முகாம்களை சேதப்படுத்தியதுடன், அதனை அழித்தது குறிப்பிடத்தக்க சாதனை என்று அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை உலக நாடுகள் பார்த்தாக கூறிய அமித்ஷா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் கடுமையான தாக்குதலில் இருந்து மீள்வதற்கு பாகிஸ்தானுக்கு நீண்ட நாட்களாகும் என்றார்.