காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் ஆபரேஷன் சிந்தூர் இந்தியா தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
ஆபரேசன் சிந்தூர் பற்றி மக்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது..
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தைரியம் நிறைந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையாக ஆபரேசன் சிந்தூர் அமைந்தது. இந்தியாவின் நவீன ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினோம்.
இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் தீவிரவாத இடங்களை மட்டுமே நாங்கள் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
இந்திய வீரர்களின் வீரத்திற்குகும், திறமைக்கும் நான் தலைவணங்குகிறேன். அப்போது, இந்திய படைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது என ஆபரேசன் சிந்தூர் வாயிலாக தெளிவுப்படுத்தப்பட்டது. ஆனால், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது
நமது இலக்கு 100 சதவீதம் எட்டப்பட்டு விட்டது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எந்த அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை. அது ஒரு தற்காப்பு நடவடிக்கை. முப்படைகளின் அசாத்திய ஒருங்கிணைப்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
பயங்கரவாதிகளை வளர்த்தெடுக்கும் இடங்கள் மட்டுமே இலக்காக இருந்தது. போரை நிறுத்த முதலில் பாகிஸ்தான் நாடே கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டதும், தாக்குதலை நிறுத்த அந்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். நம்முடைய நோக்கங்கள் நிறைவேறின என்று பேசியுள்ளார்.