பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் (70) மாண்டியாவில் உள்ள காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான சுப்பண்ணா அய்யப்பனுக்கு கடந்த 2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
மைசூரு விஸ்வேவரய்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 7ம் தேதி முதல் சுப்பண்ணா அய்யப்பனை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாண்டியாவில் உள்ள காவிரி ஆற்றில் சுப்பண்ணா அய்யப்பன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சுப்பண்ணா அய்யப்பன் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சுப்பண்ணா அய்யப்பன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.