இந்திய – பாகிஸ்தான் இடையே நடைபெறும் பதற்றமான சூழலில் ஏவுகணைகள், டிரோன்களை விட அதிகமான வதந்திகளையே பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று இந்திய ராணுவம் எச்சரிக்கிறது.
ஆபரேஷன் சிந்தூரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதே நாடு முழுவதும் பேச்சாய் இருக்கிறது. இதுவரை அடியும் பதிலடியுமாய் மாற்றி மாற்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தரை மார்க்கமாகத் தாக்குதல்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து வருகிறது. எல்லையோர மாநில மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
இந்தியாவின் அடுத்த நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இந்தியா – பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து விரிவாக விளக்கினர்.
பொய் புளுகும் பாகிஸ்தான்
அதில், பாகிஸ்தான் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அதிகமாகச் செய்து வருவதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
தொடர்ந்து பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், “பாகிஸ்தான் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறது. யாரும் அதை நம்ப வேண்டாம்.”
“ஆதம்பூரில் உள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்பைச் சேதப்படுத்தி விட்டதாக பாகிஸ்தான் பொய்யான தகவலைப் பரப்புகிறது. சிர்சாவில் உள்ள விமான நிலையங்கள், நக்ரோட்டாவில் உள்ள பிரம்மோஸ் அமைப்புகள், சண்டிகரில் உள்ள ராணுவ தளங்களைப் பாகிஸ்தான் தாக்கியிருப்பதாகக் கூறும் செய்திகளும் பொய்யானவை.” என்று கூறினார்.
உடன் பேசிய விக்ரம் மிஸ்ரி, “அமிர்தசரஸ் நகரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தி போலியானது. அதேபோல் பாகிஸ்தானில் உள்ள நான்காமா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்படதாகக் கூறுவதும் வதந்தியே. வகுப்பு வாத பிரிவினையை உருவாக்கவே இவற்றை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருகிறது” என்றார்.
பொளந்து கட்டும் இந்தியா
இப்படித் தொடர்ந்து பூச்சாண்டி காட்டி வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா உண்மையாகவே சில பதிலடிகளைக் கொடுத்துள்ளதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறினார்.
“எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நியாயமற்ற தாக்குதல்களை நடத்தியது. விமானத் தளங்கள், மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களைக் குறிவைத்து டிரோன்களைப் பறக்கவிட்டது. உதம்பூர், ஆதம்பூர், பதான்கோட் உள்ளிட்ட இடங்களை நோக்கிப் பறக்கவிட்ட 400-க்கும் மேற்பட்ட டிரோன்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
பாகிஸ்தானின் ரஃபிகி, சக்லாலா, முரித், சுக்கூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ராணுவ தளங்கள் வான்வழித் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டுவிட்டன. பஸ்ரூரில் உள்ள ரேடார் தளம் மற்றும் சியால்கோட்டில் உள்ள விமான தளங்களும் தகர்க்கப்பட்டுவிட்டன”
“பாகிஸ்தானை நோக்கி 4 வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டன. அதில் ஆயுதம் ஏந்திய டிரோன்கள் பாகிஸ்தானின் ஏடி ரேடாரை அழித்திருக்கிறது” என்று தெரிவித்தார். இந்தியாவின் ராணுவத் திறன் குறித்த குறை மதிப்பை உட்படுத்தி, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே பாகிஸ்தான் இதைச் செய்வதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இந்தத் திட்டம் பலிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது இந்திய ராணுவம்.
-விவேக்பாரதி