இன்று மும்பையில் 2வது சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
நாட்டின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான மும்பையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மிகப்பெரிய அளவில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணி 4 கட்டங்களாக நடைபெற்றது. ரூ.19,650 கோடியில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்ட பணி நிறைவு பெற்றது.
இந்த நிலையில் விமான நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து ஆச்சார்யா அட்ரோ சவுக் முதல் கப்பரேடு வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக ரூ.12,300 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பை மெட்ரோவின் 3வது வழித்தட பணியும் முற்றிலும் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனை தொடர்ந்து மும்பை ஒன் போக்குவரத்து திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து மும்பைக்கு வரும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மும்பையில் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.