பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை எட்டு நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கியுள்ளார். இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீண்டகால பயணமாக அமைந்துள்ளது. இந்த பயணத்தில் அவர் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள ஐந்து நாடுகளுக்குச் செல்கிறார்.
இந்தியாவுக்கும் உலகளாவிய தென் பகுதிகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
பயணத் திட்டம்:
கானா (ஜூலை 2 & 3): கடந்த 30 ஆண்டுகளில் கானாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். இது இவருக்குமான முதல் கானா பயணம்.
டிரினிடாட் அண்ட் டொபாகோ (ஜூலை 3 & 4): இங்கு அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜென்டினா:
பிரேசில் (ஜூலை 5 – 8): பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு, பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், பொறுப்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, காலநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடுகளை அவர் முன்வைப்பார். மாநாட்டின் ஒரு பகுதியாகப் பல இருதரப்பு சந்திப்புகளையும் பிரதமர் மேற்கொள்வார்.
நமீபியா:
தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக நமீபியா செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் நந்தி தைத்வாவைச் சந்தித்துப் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசுவார். நமீபிய நாடாளுமன்றத்தில் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய ஐந்து நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த எட்டு நாள் சுற்றுப்பயணம் ஜூலை 9 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவின் உலகளாவிய உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.