சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவிலில் நகை பணம் தொலைந்த விவகாரத்தில் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமார் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை CBI அல்லது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். ரூ.50,00,000 இடைக்கால நஷ்ட ஈடாக அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு வழங்கி, சம்பந்தப்பட்ட காவலர்களின் மீது இந்தியச் சட்டப்பிரிவு 103 (கொலை) உட்பட வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து, காவல்துறையினர் வன்முறைகளை தடுக்கும் வகையில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் ஹென்றி ஆஜராகி, பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கிய புகைப்படங்கள் மற்றும் காவல்துறையினர் அடித்த வீடியோ நீதிபதிகளிடம் காண்பித்தார். தொடர்ந்து, தாக்குதல் நடத்தும் போது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து உள்ளார்.

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அஜித்தின் அம்மாவிடம், உங்கள் மகன் இறந்து விட்டார் என கூறி உள்ளார். இது முழுக்க முழுக்க சட்ட விரோதமாக நிகழ்ந்த காவல் மரணம். தலைமை காவலர் கண்ணன் இவர் மானாமதுரை டிஎஸ்.பி யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து, திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறுவதாகவே பார்க்கப்பட வேண்டும். அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை கதை கூறுகின்றனர்.

திமுகவை சேர்ந்த சேங்கைமாறன் (அவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்), மகேந்திரன் திருப்புவனம் திமுக செயலர், காளீஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி ஆகியோர் அஜித் இறந்த பின்பு 50 லட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர்.

திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரிக்கும் போது அவரைச் சுற்றி காவல் துறையினர் சூழ்ந்திருந்தனர்.
உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை. உடற்கூராய்வு அறிக்கை தற்போது வரை அஜித்தின் தாயிடம் வழங்கவில்லை என்றார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் பேசுகையில், காவலர்கள் அஜித்தை பைப் மூலம் அடித்து விசாரித்தனர். தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும் தவறு செய்தவர்களுக்கு ஒருபோதும் நாங்கள் ஆதரவாக இருக்க மாட்டோம் என்று கூறப்பட்டது.

வழக்கறிஞர் மாரீஸ்குமார் தன் வாதத்தில், அஜித் குமார் கூறுவது பொய் என கூறியதால், திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் நன்றாக கவனியுங்கள் என கூறியதாக , சிறப்பு விசாரணை குழுவின் தலைமை காவலர் கூறியுள்ளார். ஆகவே அவர்கள் இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:

நகை காணாமல் போனது தொடர்பாக என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது? அப்போது அரசு தரப்பில், 28.06.25 பதிவு செய்யப்பட்டது, புகார் அளித்தவும் CSR பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. நகை காணாமல் போன வழக்கில் ஏன் FIR பதியவில்லை? சிறப்பு விசாரணைக்கு மாற்றியது யார் அவருக்கு என்ன அதிகாரம் இந்த வழக்கை சிறப்பு பிரிவுக்கு மாற்றியதற்கான காரணம் என்ன-.

குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்னரே FIR பதிய வேண்டுமெந்ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது.
சிறப்பு காவலர்கள் யார் உத்தரவின் பேரில் இந்த வழக்கை விசாரித்தனர். தனிப்படை பிரிவு போலீசாருக்கு விசாரியுங்கள் என யார் உத்தரவு விட்டது. சமூக வலைதளங்களில் வரும் ஊழல் தகவல்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரிப்பார்களா. சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விபரங்களை மறைக்கக்ச்கூடாது.

திருட்டு வழக்கில் ஒரு நபரை விசாரணை என அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை. நீங்கள் முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள். ஏன் பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவன் நீதிமன்ற நீதிபதிக்கு இன்னும் அளிக்கவில்லை. அரசு மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டி. ஜி பி பதிலளிக்க வேண்டும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏன் இடமாற்றம் செய்தீர்கள் உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். சிசிடிவி பதிவிலிருந்து மறைக்க விரும்புகிறீர்களா? பின் ஏன் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கிறீர்கள்?

1.அரசு மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும்?

2.சிறப்புப்படையிடம் ஒப்படைத்தது யார்? அஜித் 2 நாட்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?

3.மாஜிஸ்ட்ரேட்டிக்கு உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கை ஏன் அனுப்பபடவில்லை?
4. எஸ்.பி யை உடனடியாக இடமாற்றம் செய்தது ஏன்? எதிர்கொள்ள வேண்டியதுதானே?
5. அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர், அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.ஏன் இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள். மனுதாரர்கள் சமர்ப்பித்தவை நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது. சட்டவிரோத காவல் மரணம் அடிப்படை உரிமைக்கு எதிரானது. காவல்துறையினர் பொதுமக்களை பாதுக்காக்கவே. ஆகவே, சட்டவிரோத காவல் மரணங்களை நீதிமன்றம் கடுமையாக பார்க்கிறது. திருப்புவனம் நீதித்துறை மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றம் சமர்ப்பிக்க வேண்டும்.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர், அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். உடற்கூராய்வு அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவு.

Share.
Leave A Reply

Exit mobile version