ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற 70 வயது நடராஜ் மாஸ்டர் என்பவர், சிறுமி ஒருவரிடம் தன்னுடைய பாலியல் ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடராஜ் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த முதியவர் சிறுமியிடம் “நைசாகப் பேசி” தன்னுடைய பாற்றின்ப ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. முதலில் நிலைமையை உணராமல் தடுமாறிய சிறுமி, பின்னர் தனக்கு ஏற்பட்ட ஆபத்தைப் புரிந்துகொண்டு, நடராஜ் மாஸ்டரின் கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

 

சிறுமி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மசூலிப்பட்டினம் போலீசார் உடனடியாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். நடராஜ் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்தக் காட்சிகளில், சிறுமி சுமத்திய குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நடராஜ் மாஸ்டரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் பேரம் பேசி, பண ஆசை காட்டி வழக்கை திரும்பப் பெற சிலர் முயற்சிப்பதாகவும், அதனால்தான் கைது தாமதமாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

மேலும், நடராஜ் மாஸ்டர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது உடன் பணியாற்றிய ஆசிரியைகளிடமும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version