தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், ஆளும் கட்சி அவரைத் தூண்டி, தங்களுக்கு எதிராக “பொய்யான, ஆதாரமற்ற மற்றும் அவதூறான” குற்றச்சாட்டுகளைக் கூற வைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை அன்று சில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரதமரின் இருக்கைக்கு வந்து “முன்னெப்போதும் இல்லாத ஒரு சம்பவத்தில் ஈடுபடக்கூடும்” என்று தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதனால் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்தையும் தடுக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடியை அவைக்கு வர வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருந்தார்.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றும், அதே சமயம் ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் பிரதமர்களைப் பற்றி ‘ஆபாசமான மற்றும் அருவருப்பான’ கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டார் என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், பிரதமரின் வருகையின்மையை நியாயப்படுத்த ஆளும் கட்சியின் அழுத்தத்திற்கு ஆளாகி, சபாநாயகர் தங்களுக்கு எதிராக “கடுமையான குற்றச்சாட்டுகளை” சுமத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ள தைரியமில்லாமலேயே பிரதமர் அவைக்கு வரவில்லை என்றும் இது ஒரு பயத்தி வெளிபாடு என்று கூறிய பெண் எம்.பி.க்கள், தங்கள் போராட்டங்கள் அமைதியானவை, உறுதியானவை மற்றும் முற்றிலும் ஜனநாயக நெறிகளுக்கு உட்பட்டவை’ என்று வலியுறுத்தினர்.
ஜனநாயகக் கொள்கைகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் கட்சி அன்பு, அமைதி, அரசியலமைப்பு மதிப்புகள் மனித மாண்புக்காக நிற்கிறது என்று கூறினர். மிரட்டல்களால் தங்களை அமைதியாக்கிவிட முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறியதுடன், சபாநாயகர் அலுவலகத்தின் மாண்பை மீட்டெடுக்கவும், மக்களவையின் நம்பகத்தன்மையைப் பேணவும் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் வலியுறுத்தினர்.
