ராகுல்காந்தி வெளியிட்ட வாக்கு திருட்டு தொடர்பான ஆவணத்தில் இடம்பெற்றுள்ள பிரேசில் மாடல் அழகி லாரீசா நேரி அது தொடர்பாக கிண்டலடித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

புது டெல்லியில் புதன்கிழமையான நேற்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ‘H FILES’ என்ற பெயரில் ஹரியானா மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களாக சில ஆவணங்களை வெளியிட்டு பேசினார்.

ஹரியானா மாநில தேர்தலில் 22,779 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றதாகவும், அதில் குறிப்பாக 8 தொகுதிகளில் மிக குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே தோற்றதாகவும் தெரிவித்த ராகுல்காந்தி, பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி புகைப்படம் ஹரியானா பட்டியலில் பல பெயர்களுடன், 10 வாக்குச்சாவடிகளில் 22 வாக்குகளாக பதிவாகி இருந்தது எனக் கூறி அதற்கான படத்தை காண்பித்தார். இதே போன்று, 2 வாக்குச்சாவடிகளில் ஒரு பெண்ணின் விவரங்கள் மட்டும் 223 முறை பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ராகுல் குற்றம்சாட்டினார். இதையடுத்து யார் இந்த லாரீசா நேரி? என்பது நாடு முழுக்க பேசுபொருளானது.

இந்நிலையில் இவ்விவகாரத்தை அறிந்த அந்த பிரேசில் மாடல் லாரீசா நேரி கிண்டலாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் போர்ச்சுகீசிய மொழியில் பேசியுள்ள அவர், “இந்தியாவில் வாக்களிக்க எனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது விசித்திரமாகவும், வியப்பாகவும் இருக்கிறது. அது நான் 18 அல்லது 20 வயது இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம். புகைப்பட வலைத்தளங்கள் மூலமாக தேர்தலுக்காகவோ அல்லது வாக்களிப்பதற்காகவோ வாங்கி அதை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர். என்னை இந்திய பெண்ணாக காட்டி ஏமாற்றுகிறார்கள். நான் இந்தியாவுக்கு சென்றதே கிடையாது. எனக்கு ‘நமஸ்தே’வை தவிர வேறு எதுவும் தெரியாது. என்னை தொடர்பு கொள்ளும் பத்திரிகையாளர்கள் நேர்காணல் வேண்டுமென கேட்கிறார்கள். எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. நாம் எந்த உலகில் வாழ்கிறோம்” என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version