காற்று மாசுபாடு விவகாரத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டாமல், ஒன்றாக இணைந்து தீர்வை கொண்டுவர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 10வது நாளில் , எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிலவி வரும் காற்று மாசுபாடு குறித்த கேள்விகளை எழுப்பினார். அப்போது பேசிய அவர், நான் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களைப் பற்றிப் பேசுகிறேன். இது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையக்கூடிய ஒரு பிரச்சினை . நமது எதிர்காலம் சேதமடைந்து வருகிறது, மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், குழந்தைகள் அவதிப்படுகிறார்கள், நாங்கள் சுவாசிக்க முடியவில்லை. இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன் என்று கூறினார்.
” இந்தப் பிரச்சினையில் அனைவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக ஒருமித்த கருத்துடன் விவாதிக்க வேண்டும். இது எதிர்காலத்தின் விஷயம். நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, நாங்களும் இணைந்து செயல்படுவோம். சரியான திட்டம் என்றால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு , அனைத்து முக்கியமான பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் முதல் நாளிலிருந்தே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது என்றார். காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களின் பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்கத் தயாராக உள்ளது என்று கூறினார்.
