விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் மாநிலம் அகமதபாத்தில் இருந்து கடந்த ஜூன் 12 ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணித்தவர்களில் 240 நபர்களும், மருத்துவ வளாகத்தில் இருந்த 19 நபர்களும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு விமான பைலட் தான் காரணம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் இவ்வாறு ஊடகங்கள் சரிபார்க்கப்படாத, யூகமான, அவதூறான கருத்துகளை பரப்பி வருதாக கூறி கோவையை சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஊடகங்கள் ஆதாரமற்ற வகையில் செய்தி வெளியிடுவது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
விமான விபத்திற்கு பைலட் தான் காரணம் என அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது அந்த விபத்தில் இறந்த பைலட்டுகளை களங்கப்படுத்தும் செயல் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதனால் விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வத்ஸவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, மனுதாரர் கோரியதைப் போல உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.