தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் மற்றும் பிற கடல் உணவுகள் ஏற்றுமதி செய்வது, அமெரிக்காவின் புதிய 50% வரி விதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்தியாவிலிருந்து சுமார் ரூ.23,000 கோடிக்கு கடல் உணவுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த வரி விதிப்பின் காரணமாக, தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கான இறால் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள், ஒரு கண்டெய்னரில் 3% முதல் 4% வரை மட்டுமே லாபம் கிடைப்பதாகவும், புதிய வரி விதிப்பால் லாபத்தை விட வரி அதிகமாக இருப்பதால் ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அனுப்பப்பட்ட கண்டெய்னர்களை அமெரிக்க வியாபாரிகள் ஏற்க மறுத்துவிட்டதால், அவை அமெரிக்காவை சென்றடைய 15 நாட்கள் ஆகும் வரை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஒருவேளை கண்டெய்னர்கள் ஏற்கப்படாவிட்டால், அவை மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும். அல்லது வேறு நாடுகளுக்கு அனுப்பவேண்டுமென்றால், அவற்றை மீண்டும் பேக்கிங் செய்ய அதிக செலவு ஏற்படும்.
இதையும் படிக்க: சென்னையில் வெடித்த வன்முறை – தடியடி நடத்திய போலீசாரால் பரபரப்பு
தற்போது மற்ற நாடுகளுக்கு இறால், கணவாய், நண்டு, ஆக்டோபஸ் போன்ற கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், நிறுவனங்களில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதே நிலை நீடித்தால், உற்பத்தி குறைந்து தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தத் தொழில் முற்றிலும் மனிதவளத்தை நம்பி இருப்பதால், இப்போதைய நிலை தொடர்ந்தால் பெரும் நெருக்கடி ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.