நாளை 79-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தலைநகர் டெல்லியில் வலராற்று சிறப்புமிக்க செங்கோட்டையில், நடைபெறும் கொண்டாட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு பிரதமர் சுதந்திர தினவிழாவில் கொடியேற்றி வைப்பார்.
அதன்படி இந்தாண்டும் பிரதமர் மோடி கொடியேற்றவுள்ளார். தொடர்ச்சியாக 12-வது முறையாக அவர் கொடியேற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு இவர் கொடியேற்றபோது, தொடர்ந்து 10 முறை கொடியேற்றி இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் சாதனையை முறியடித்து இருந்தார்.
தற்போது 12-வது முறையாக கொடியேற்றி இந்திராகாந்தி மற்றும் நேருவின் சாதனையை நெருங்க இருக்கிறார். சுதந்திர தினவிழா டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7.30 மணிக்கு தொடங்கும். பிரதமர் மோடி காலையில் அங்கு வரும் போது நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேட் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஆகியோர் வரவேற்கிறார்கள்.
இந்த விழாவை முன்னிட்டு, செங்கோட்டையின் முழு கட்டுப்பாடும் காவல்துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேப் போல் இந்தியா கேட் போன்ற பகுதிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
செங்கோட்டையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு, கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் டிரோன்கள் பறக்கவும், காற்றாடி விடவும், ராட்சத பலூன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்குள் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், வணிக நோக்கத்துக்காக இயங்கும் வாகனங்களின் நுழைவுக்கு நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக டெல்லி முழுவதும் 10,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேப் போல போக்குவரத்து பணிகளுக்காக 3,000 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது தவிர, மத்திய ஆயுதப்படையினர் உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் 2,000 பேர், 15,000 காவல் பணியாளர்கள் பல பிரிவுகளாக பாதுகாப்பை மேற்கொள்கின்றனர்.
விமான நிலையத்தில் பட்டியலிடப்படாத விமானங்களுக்கு காலையிலும், மாலையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.