ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்கள் நீக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் புகைப்படம் மற்றும் QR குறியீடு மட்டுமே இடம்பெறும் வகையில் புதிய வடிவமைப்பு வரப்போவதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இந்தத் தகவல்களை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. ஆதார் அட்டையை மறுவடிவமைப்பு செய்யும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், மக்கள் இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்தொடருமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே, நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் ஆதார் அட்டையைப் பெறுவதைத் தடுக்க ஒரு புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த அந்த மனுவில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இனி புதிய ஆதார் அட்டைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, “இது கொள்கை முடிவு சார்ந்தது, எனவே இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் மற்றும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version