இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான உறவு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பொருளாதார பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா–ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தில் (India-Japan Joint Economic Forum) உரையாற்றிய அவர், “இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை எதிர்காலத்தை நோக்கியதும், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்டதுமான ஒன்றாக உருவெடுத்து வருகிறது” என்று கூறினார்.

இரு நாடுகளின் அரசுகளுக்கும் இடையே மூலோபாய ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தெளிவான நோக்கம் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் இந்திய முதலீடு 10 டிரில்லியன் யெனை தாண்ட வேண்டும் என்றும், இந்தியாவில் செயல்படும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஜப்பானின் தொழில்நுட்ப திறனும், இந்தியாவின் பரந்த சந்தை வாய்ப்பும் இணைந்து குறைகடத்திகள் (Semiconductors), மருந்துத் தயாரிப்பு (Pharmaceuticals), முக்கிய கனிம வளங்கள் (Critical Minerals) உள்ளிட்ட துறைகளில் உலகிற்கு வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோல், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology), விண்வெளி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா-ஜப்பான் இணைந்து அடுத்த தலைமுறை கண்டுபிடிப்புகளை உருவாக்கும் என்றும், இது உலகளாவிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவில் தொழில் செய்வதை மேலும் எளிதாக்கும் நோக்கில், பிரதமர் அலுவலகம் (PMO) சார்பில் ‘ஜப்பான் பிசினஸ் வீக்’ (Japan Business Week) நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி, பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஜூலை 1 முதல் 3 வரை இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரு தலைவர்களும் முதலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற விரிவான ஆலோசனைகளுக்கும் தலைமை தாங்கினர்.

இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்திய வருகையின் தொடக்கத்தில் ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை முன்றலில் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version