இந்தியாவில் 60 வயதை கடந்த முதியவர்கள் அதிகம் வசிக்கும் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

நாட்டில் மக்கள் தொகை மற்றும் மாநிலங்கள் நிதி அடிப்படையாக கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதியோர்களின் எண்ணிக்கையை பொறுத்து 3 பிரிவுகளாக மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையின் படி, 15 சதவீதத்துக்கும் அதிகமான முதியோர் உள்ள மாநிலங்களை முதுமை அடைந்த மாநிலங்கள் எனவும், 10 முதல் 15 சதவீதம் வரை முதியோர் உள்ள மாநிலங்கள் இடைநிலை மாநிலங்கள் என்றும், 10 சதவீதத்தை விட குறைந்த அளவில் முதியோர் உள்ள மாநிலங்களை இளைஞர் மாநிலங்கள் என வகைப்படுத்தியுள்ளது.

அதன்படி, 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 15.8சதவீதம் முதியோர்கள் உள்ள நிலையில் இது 2031-ம் ஆண்டு 20.9சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஆய்வு அறிக்கையின் படி, நாடு முழுவதும் 60 வயதை கடந்த முதியோர் எண்ணிக்கை 11.4சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2036-ம் ஆண்டுக்குள் 14.6சதவீதமாக உயரும்.

ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கையின் படி, 18.7சதவீத முதியோருடன் முதுமை மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதல் இடத்தையும், 15.8சதவீதத்துடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 2031-ம் ஆண்டு இது 20.8சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதார தாக்கம் ஏற்பட்டு ஓய்வூதியம், சுகாதாரம், சமூக பாதுகாப்புக்கு மாநில அரசுகளின் செலவினங்கள் கணிசமாக அதிகரிக்கும். உழைக்கும் மக்கள் தொகை குறைவதால், வருவாய் வளர்ச்சி குறைந்து மாநிலத்தின் வரி வருவாய் திறன் பாதிக்கப்பட்டு நிதிச்சுமை அதிகரித்து பெரும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version